புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஏப். 2-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில், பிப்ரவரி 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது ராகுல் காந்தி உரையாற்றும்போது, முப்படைகளின் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதிய புத்தகத்தில் சில வரிகளைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியையும் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் விமர்சித்தார்.
தொடர்ந்து இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் அறிவித்ததைக் குறிப்பிட்டு, ‘அமெரிக்காவிடம் மோடி சரணடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவை தலைமைச் செயலாளரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீசினர்.
இதனால், அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பெயா்களைக் குறிப்பிட்டு அவர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய சபாநாயகர் தலைமையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மக்களவையில் நாளை பிற்பகல் 12 மணிக்கு எம்.பி.க்கள் இடைநீக்க ரத்துக்கான முன்மொழிவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தாக்கல் செய்யவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அவையில் நன்னடத்தையுடன் செயல்படுவார்கள் எனவும் எம்.பி.க்கள் தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
