சென்னை,
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் உள்ளிட்டோர் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஷங்கர் வழக்கு தொடர்ந்து, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகக்கு இடைக்கால தடையை பெற்றார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சுரேந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஷங்கர் தரப்பில் வக்கீல் சாய்குமரன் ஆஜராகி, “ஆரூர் தமிழ்நாடன் தன் புகாரையும், சிவில் வழக்குகளையும் திரும்ப பெற்றுவிட்டார். அவரது வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பிரதான வழக்குகள் எதுவும் இல்லை என்பதால், அமலாக்கத்துறையினரின் நடவடிக்கையை ரத்து செய்து, இந்த மனுவை முடித்து வைக்கவேண்டும்” என்று வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், இதற்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
