என்னுடைய கடமையை வெளிப்படையாக, பாகுபாடற்ற முறையில் செய்வேன்: ஓம் பிர்லா

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தபோது, இதற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக, குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர் நாடாளுமன்ற மேலவையில் அதற்கு பதிலளித்து பேசினார்.

அவர் மக்களவைக்கு வராதது பற்றி குறிப்பிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் முயற்சித்தனர் என திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார். ஆனால், இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என காங்கிரஸ் கட்சி மறுத்தது. இந்நிலையில், பிர்லாவுக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கும்படி, அதனை அவையின் பொது செயலாளருக்கு ஓம் பிர்லா அனுப்பினார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில், மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி 118 எம்.பி.க்களின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று குரல் வாக்கெடுப்பு நடந்தது.

எனினும், கடும் அமளி மற்றும் கோஷத்திற்கு இடையே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்தபடி கைகளை உயர்த்தி அதனை தோல்வியடைய செய்தனர். அவையில் பெரும்பான்மையான எம்.பி.க்களை பா.ஜ.க. வைத்துள்ள சூழலில், இந்த தீர்மானம் எளிதில் தோல்வியடைந்தது.

சபாநாயகரை பதவி நீக்க கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், ஓம் பிர்லா அவையில் இன்று உறுப்பினர்கள் முன்னிலையில் பேசினார். அவர் கூறும்போது, என்னுடைய கடமையை வெளிப்படையாகவும், பாகுபாடற்ற முறையிலும் செய்வேன் என மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, அவை உறுப்பினர்கள், அவையின் மரபுகளை வலுப்படுத்தியும், எப்போதும் அவையின் அந்தஸ்தை அதிகரித்தும் வந்துள்ளனர். என் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

என்னுடைய கடமையை பாகுபாடின்றி, வெளிப்படையான முறையில் மேற்கொள்ள எப்போதும் நான் வேலை செய்வேன் என்ற என்னுடைய நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கிறேன் என கூறினார்.

சில உறுப்பினர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை என கூறுகின்றனர். ஆனால், மந்திரியோ அல்லது எதிர்க்கட்சி எம்.பி.யோ, எந்த உறுப்பினரானாலும், ஒவ்வொருவருக்கும் விதிகளின்படி பேசுவதற்கு உரிமை உள்ளது என நான் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என்றார்.

அவையானது விதிகளின்படி செயல்படும். அரசாலோ அல்லது எதிர்க்கட்சியாலோ விதிகள் உருவாக்கப்படவில்லை. இந்த அவையில் அனைத்து உறுப்பினர்கள் மீதும் சமஅளவில் விதிகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

Source link