'என்னை அமைதித் தூதுவராகவே உலகம் நினைவில் கொள்ள வேண்டும்' – டிரம்ப்

வாஷிங்டன்,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குரத்து தடைபட்டது. இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார். பின்னர் இந்த தாக்குதல் நிறுத்தம் ஏப்ரல் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நான் அமைதியை ஏற்படுத்துகிறேன். என்னை ஒரு மிகச்சிறந்த அமைதித் தூதுவராக உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒரு உண்மையான அமைதி விரும்பி. பல போர்களை நிறுத்தி மக்களின் உயிர்களைக் காத்துள்ளேன். இதுவே எனது வாழ்நாள் அடையாளமாக இருக்க வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

அதோடு, ஈரான் குறித்து டிரம்ப் பேசுகையில், “டிரம்ப் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். அதாவது, மன்னிக்க வேண்டும், நான் ஹார்முஸ் ஜலசந்தியைப் பற்றி கூறினேன்” என்றார். அவர் இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்து சிரிப்பலை எழுந்தது.

மேலும், நோபல் பரிசு குறித்து பேசிய அவர், “அமைதிக்கான நோபல் பரிசு எனக்குக் கிடைக்காமல் வேறு யாருக்கும் கிடைப்பதில் அர்த்தமில்லை. வேறு நபருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டாலும் எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அந்த பரிசைப் பெற்றவரே அதிர்ச்சியடைந்துவிட்டார். அவர் ஒரு அற்புதமான பெண்மணி ஆவார்” என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு போர்களை நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினாவுக்கு வழங்கப்பட்டது. அந்த பரிசை அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link