பெங்களூருவில் நம்ம மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் வகையில் பிங்க் லைன் வழித்தடத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆர்.டி.எஸ்.ஓ சார்பில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிங்க் லைன் மெட்ரோ சோதனை ஓட்டம்
இம்மாத இறுதியில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும், அடுத்த இரண்டு வாரங்கள் நீடித்து பின்னர் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டிருக்கின்றனர். அதன்படி, கலேனா அக்ரஹாரா முதல் தாவரகெரே வரையிலான 7.5 கிலோமீட்டர் தூர வழித்தடம் மே மாத இறுதியிலும், எஞ்சிய டயர் சர்க்கிள் முதல் நாகவரா வரையிலான 13.8 கிலோமீட்டர் தூர வழித்தடமானது டிசம்பர் 2026லும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
BMRCLக்கு வந்த 4 மெட்ரோ ரயில்கள்
ஏற்கனவே BEML-யிடம் இருந்து 4 ரயில் செட்கள் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில் பிங்க் லைன் வருகையால் பெங்களூரு நகர மக்கள், எந்த அளவிற்கு பயன்பெறுவர் என்று விரிவாக பார்க்கலாம். இதில் டயரி சர்க்கிள் முதல் நாகவரா வரையிலான பகுதி சுரங்க வழித்தடமாகவும், கலேனா அக்ரஹாரா முதல் தாவரகெரே வரை உயர்மட்ட வழித்தடமாகவும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பிங்க் லைன் மெட்ரோ சேவையால் பன்னர்கட்டா ரோட்டில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
எம்.ஜி.ரோடு – சிவாஜி நகர் ரூட்டில் மெட்ரோ பயணம்
ஐஐஎம் பெங்களூரு, ஹனிவெல், ஜெயதேவா, போர்டிஸ், அப்போலோ உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் பயணம் விரைவுபடுத்தப்படும். குறிப்பாக பெங்களூருவின் மத்திய பிஸினஸ் மாவட்டங்களாக கருதப்படும் எம்.ஜி.ரோடு, சிவாஜி நகர், கன்டோன்மென்ட் ரயில் நிலையம் ஆகியவற்றின் வழியே பயணிப்பதால் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும். மேலும் 4 மெட்ரோ ரயில் வழித்தடத்துடன் இண்டர்சேஞ்ச் வசதியும் கிடைக்கிறது.
4 மெட்ரோ சேவைகள் உடன் இண்டர்சேஞ்ச்
அதாவது, எல்லோ லைனில் ஜெயதேவா மருத்துவமனை, பர்பிள் லைனில் எம்.ஜி.ரோடு, ப்ளூ லைனில் நாகவரா, ஆரஞ்சு லைனில் ஜே.பி.நகர் 4வது பேஸ் ஆகியவற்றில் இறங்கி பயணிகள் மாறிக் கொள்ள முடியும். தற்போது பெங்களூரு தெற்கில் (கலேனா அகரஹாரா) இருந்து வடக்கு (நாகவரா) வரை செல்வதற்கு சாலை மார்க்கமாக பீக் ஹவர்களில் 90 நிமிடங்கள் வரை ஆகிறது.
பெங்களூருவில் 35 நிமிட பாஸ்ட் பயணம்
இந்நிலையில் பிங்க் லைன் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் வெறும் 35 நிமிடங்களில் பயணித்து விடலாம் என்கின்றனர். பெங்களூரு நம்ம மெட்ரோ பிங்க் லைன் சேவை வருங்காலத்தில் எவ்வாறு விரிவுபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதாவது, புதிய வழித்தடங்கள் உடன் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிகிறது. உதாரணமாக ஆரஞ்சு லைன், ரெட் லைன் ஆகியவற்றுடன் இணைத்து நகரின் மூலை முடுக்குகள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளுக்கும் சீரான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இருக்கும் என்று கூறுகின்றனர்.
