புதுடெல்லி,
மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியால் பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதில் ஒன் றாக, இந்தியா முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட இ-20 பெட்ரோலை இன்று (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் எண்ணெய் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் போர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் விமான எரிபொருள் கடுமையான விலை ஏற்றம் கண்டுள்ளது. உள்நாட்டு விமானங்களுக்கான விமான எரிபொருள் விலை ஆயிரம் லிட்டருக்கு ரூ.96,638ல் இருந்து ரூ.2.07 லட்சமானது. சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை ஆயிரம் லிட்டருக்கு ரூ.76,311 இல் இருந்து ரூ.1.58 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விமானக் கட்டணங்களை நிறுவனங்கள் விரைவில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
