இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. சாகித்ய அகாடமி 1954ல் துவக்கப்பட்டது. 1955ல் வழங்கிய முதல் விருது, நெல்லையை சேர்ந்த ஆர்.பி.சேதுப்பிள்ளைக்கு, தமிழ் இன்பம் படைப்பிற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசால் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருதிற்கு பின் வழங்கப்படும் இரண்டாவது உயரிய இலக்கிய விருதாகும். 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது என்றும், 50க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன் எனவும் ச.தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனை வாழ்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ ‘வெயிலோடு போய்’ சிறுகதை தொகுப்பின் மூலம் என் வாசிப்புக்கு அறிமுகமான பெயர் ச. தமிழ்ச்செல்வன். தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் தன் பங்களிப்புகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சிறுகதைகளின் பங்கு எந்த விதத்தில் இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலான ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்னும் நூலுக்கு அவர் சாகித்திய அகாடமி விருது வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தமிழ்ச்செல்வன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். தொடர்ந்து இயங்குக.” என்று குறிப்பிட்டுள்ளார்.
