சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காக 2 நவீன அடுக்குமாடி வாகன நிறுத்த கட்டிடம்கள் கட்டப்பட்டுள்ளது. காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்த கட்டிடங்களில் வணிக அங்காடிகள் மற்றும் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பட்டுள்ளன. தற்போது, காந்தி இர்வின் சாலைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 2,3,4-வது தளங்களில் வாகன நிறுத்துமிடம் வசதிகள் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளன.
இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்கும் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்ய சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பெறும் நிறுவனம், வாகனங்களின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை முறைப்படுத்துதல், வாகனங்களை வரிசையாக நிறுத்துவதை உறுதி செய்தல் மற்றும் அப்பகுதியைத் தூய்மையாகப் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். டெண்டர் www.ireps.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 20-ந்தேதி நடைபெறும் என தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
