சென்னை,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, ரெயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு குழுக்களும் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
அந்தவகையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக செங்கல்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை 7-ல் வந்த நின்றது. அதில் சோதனை செய்தபோது யாரும் உரிமை கோரப்படாத பை ஒன்று கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது.
ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் போதை பொருள் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயில் பெட்டியில் கஞ்சாவை போட்டு சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வாரத்தில் மட்டும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஒரு லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கணக்கில் வராத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
