சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியும், மீதியுள்ள மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ் குப்பம், கிருஷ்ணகிரி, மாத்தூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், திருப்பாச்சேத்தி, வானகரம், விராலிமலை, வாணியம்பாடி உள்பட 66 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போல் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருடாந்திர பாஸ்டேக் பாஸ் விலையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 75 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது சுங்க கட்டண உயர்வால் மேலும் கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
