மும்பை,
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. மேலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் நடப்பு சாம்பியன் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இதுவே முதல் முறை ஆகும். இந்த அரிய சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன் 2024-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்தியா, தற்போது மீண்டும் அந்த கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இதுமட்டுமில்லாமல் இந்தியா இன்னொரு முக்கிய சாதனையையும் படைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்திருக்கிறது. இந்தியா 15-வது ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கு முன்பு 14 இறுதிப்போட்டிகளுடன் அந்த சாதனை ஆஸ்திரேலிய அணியின் பெயரில் இருந்தது.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து இதுவரை 8வது முறையாக விளையாடுகிறது. ஆனால் அந்த அணி இன்னும் டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றதில்லை. மறுபுறம், இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆகும் இலக்குடன் களமிறங்க உள்ளது.
