சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை M.A.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் ஐபிஎல்-2026 கிரிக்கெட் போட்டியை காணவரும் பார்வையாளர்கள், தங்களது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) பயணம் மேற்கொள்ளலாம். இப்போட்டியை முன்னிட்டு மாநகர் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள், சிற்றுந்துகள் (Shuttle service) இயக்க உள்ளது.
சென்னையில் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல்-2026 கிரிக்கெட் போட்டி M.A. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி நாள் அன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் Chennai Super Kings Cricket Limited நிறுவனத்திடம் மா.போ.கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ.கழக பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மாநகர போக்குவரத்துக் கழகம் ஐபிஎல்-2026 கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் மாநகர பேருந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து வரலாம். மேலும், பல பேருந்துகளை பயன்படுத்தி மைதானத்திற்கு பயணம் செய்து வரலாம். மேலும், பார்வையாளர்கள் வசதிக்காக போட்டி முடிந்த பின்பு தமது இருப்பிடம் செல்ல, மாநகர போக்குவரத்துக் கழகம் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிறுத்தம், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்கள் M.A.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ளது. மேலும், அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை முதல் M.A. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக சிற்றுந்துகள் (Shuttle service) இயக்கப்பட உள்ளது. எனவே, பார்வையாளர்கள் இப்பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
