சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இறுதிகட்டத்தை எட்டியது. இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. வருகிற 31-ந்தேதி ஐபிஎல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே மற்றும் ஸ்பான்சர்ஷிப் செய்துள்ள நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் புதிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
