ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா-லக்னோ அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்திக்கிறது.

3 முறை சாம்பியனான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும், அடுத்த ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்திடமும் தோற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டதால் புள்ளி கணக்கை தொடங்கியது.

லக்னோ அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டத்திலும், கொல்கத்தா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். அங்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கொல்கத்தா வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link