ஐ.பி.எல். டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரெயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சி.எஸ்.கே. கிரிக்கெட் லிமிடெட் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. அதன்படி, போட்டிக்கான மின்னணு அல்லது காகித பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், அதில் உள்ள பிரத்யேக கியூ.ஆர். குறியீட்டை மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

இந்த சலுகை மூலம் ரசிகர்கள் 2 முறை நுழைவு மற்றும் 2 முறை வெளியேறுதலை இலவசமாக பயணிக்க அனுமதி உண்டு. சென்னை மெட்ரோவின் எந்தவொரு நிலையத்திலிருந்தும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு செல்லவும், அங்கிருந்து திரும்பவும் இந்த வசதி பொருந்தும்.

போட்டி முடிந்து ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணி மனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களுக்குச் செல்லும் கடைசி ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும். பச்சை வழித்தடத்தில் பயணம் செய்பவர்கள், சென்னை சென்டிரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்ய முடியும். ரசிகர்கள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நிலையத்திற்குள் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link