மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.
அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ரகானே , ரகுவன்ஷி இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 221 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் ரிக்கெல்டன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தது. 4.1 ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. பவர்பிளே முடிவில் 80 ரன்கள் வந்தநிலையில் ரோகித் 23 பந்துகளில் தனது 50-வது அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரிக்கெல்டனும் தனது அரைசத்தை பதிவு செய்தார்.
அப்போது 38 பந்துகளில் 78 ரன்கள் அடித்திருந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிக்கெல்டனும் எதிர்பாராத விதமாக 81 ரன்களில் ரன் அவுட்டானார்.
பின்னர் ஹர்திக் பாண்ட்யா- திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இதில் திலக் வர்மா 20(14) அவுட்டானார். இறுதியில் 19. 1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 222 என்ற இமாலய இலக்கை எளிதாக எட்டி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் 81(43) ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, நரைன் மற்றும் கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டு எடுத்தனர்.
