ஒரு இடத்தில் கூட ஜெயிக்க மாட்டாங்க.. தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன.. தமாகாவில் இருந்து விலகிய நிர்வாகிகள் – executives oppose tmc party contesting under the lotus symbol

அதிமுகவில் தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இதற்கு அந்த கட்சியை சார்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமாகா ஜி.கே. வாசன்
சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்க, நெருங்க பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே நான்கு முனை போட்டிகள் இருந்து வரும் நிலையில் அடுத்தடுத்து சில அணிகள் உருவாகி கொண்டிருக்கிறது. இது அரசியல் களத்தை மேலும் சூடாக்கி வருகிறது. இதனிடையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது. ஜிகே வாசனின் இந்த முடிவு அந்த கட்சியை சாந்தவர் நிர்வாகிகள் இடையிலே அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ்

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகா கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க வேண்டுமென ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்தார். ஆனால் தாமகவிற்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆறு இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தொகுதி குறைத்து ஐந்து இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தாமரை சின்னத்தில் போட்டி
இந்நிலையில் தமாகா ஈரோடு மேற்கு, கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் நிலையில் அவர்களின் இரட்டை இலை சின்னத்தில் இல்லாமல் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடுவதாக அறிவித்தது அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியது.
தமாகா நிர்வாகிகள் எதிர்ப்பு
இதனையடுத்து என்டிஏ கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிடுவதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் பிஜூ சாக்கோ, புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து அளித்துள்ள பேட்டியில், தேர்தல் ஆணையத்தில் இருந்து சின்னம் பெற முடியவில்லை. இதனால் தாமரை சின்னத்தில் போட்டியிட போவதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
ஜெயிக்க வாய்ப்பே இல்லை
அதனை கூட ஏற்றுக்கொள்ளள்ளலாம். ஆனால் ஐந்து தொகுதிகளில் ஏதாவது ஒன்று ஜெயிக்கக்கூடியதாக வாங்கி இருக்கலாமே. ஒன்றாவது வெல்வதற்கான வாய்ப்புள்ள தொகுதியாக இருக்கிறதா? மூன்று அமைச்சர்கள் இருக்கக்கூடிய தொகுதி. அவர்கள் மூவரும் நிற்கிறார்கள். ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டாங்க. தொகுதி கொடுத்ததை வாங்கி கிட்டாரு. சின்னமும் அவர்கள் சொல்லும்படி நிற்பார் என்றால் என்ன அர்த்தம்.
கவுன்சிலர் சீட் கிடைக்காது
எல்லாமே முடிவும் தவறாக எடுக்கிறார். ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் சென்னையில் ஒரு இடம் கூட ஜி.கே. வாசனால் கேட்டு வாங்க முடியவில்லை. இப்போ தாமரையில் நிற்கிறார் என்றால், அடுத்து வரும் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சீட் கொடுக்குமா? அதிமுக ஜெயிக்குது இல்லை என்பதை பற்றி நாங்க சொல்ல விரும்பவில்லை. கவுன்சிலர் தேர்தலில் போய் கேட்கும்போது தாமரை சின்னத்தில் நீங்க நின்னீங்க. கவுன்சிலரும் அவுங்ககிட்ட போய் கேளுங்கன்னு அனுப்பி விடுவாங்க.
நல்லா இருக்கும் போதே கவுன்சிலர் சீட் கொடுக்கலை. இப்போ தருவாங்களா. மறுபடியும் எங்களுக்கு தவறான தகவல் கொடுத்து, பின்னாடி இருக்க வைப்பார். அவரிடம் சீட்டுக்காக இல்லை. அன்புக்காக இவ்வளவு நாள் கூட இருந்தோம். ஆனால் அந்த அன்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நாங்க ரெண்டு பேர் மட்டும் கிடையாது. இன்னும் நிறைய பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தவறான முடிவு எடுக்கிறார் என வேதனையுடன் பேட்டி அளித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம்
மேலும், கடந்த 2016 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் 10 தொகுதியில் நிற்குமாறு ஜெயலலிதா சொன்னபோது, முடியாது என தெரிவித்து மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். இப்போது பெரிய கட்சியான அதிமுக சின்னத்தில் இல்லாமல் தாமரையில் நிற்க வேண்டிய அவசியம் என்ன? எங்களோடு கலந்து ஆலோசிக்காமல் அவராகவே தாமரையில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார். அவரோடு சேர்ந்து நாங்களும் பலி கடா ஆக முடியாது எனவும் காட்டமாக தமாகாவில் இருந்து விலகிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.