ஒரு கட்சியில் யாருக்கு எப்போது வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு: ஆளூர் ஷா நவாஸ்

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன். இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link