ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தைக் கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, இயக்குநர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
சீமான் பேசும்போது, “ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது. இங்கு ஒரு படம் தயாரிப்பதற்கு எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரியும். தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரே நேரத்தில் 16 திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமா மீது வைத்திருக்கும் பேரன்பையும், பெரும் காதலையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அவரது தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இதற்கு அடுத்து இந்த படத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வெற்றி என்பது பலருடைய வாழ்க்கையில் பெரும் கொண்டாட்டமாக அமைந்து விடுகிறது. எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்குத் தேவை கடுமையான உழைப்புதான். கடுமையாக உழைக்கக்கூடிய கலைஞர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். வாழ்த்துகள்” என்றார்.
