சென்னை,
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.
தற்போது, தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் கூடுதல் தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இதனால், தி.மு.க. கூட்டணிக்கு புது வரவான தே.மு.தி.க.வுடன் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்க முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. இருக்கிறது.
இப்படி, ஒரு பக்கம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் தொகுதி பங்கீட்டை முடித்த 6 கட்சிகளும், விருப்ப தொகுதிகள் பட்டியலுடன் வந்து நிற்பதால், தி.மு.க. தலைமை கடும் சிக்கலை சந்தித்து வருகிறது. இதற்கு மத்தியில், தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
தி.மு.க. கூட்டணியில், 28 தொகுதிகளை பெற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி 39 விருப்ப தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கொடுத்து, அதில் இருந்து 28 தொகுதிகளை ஒதுக்க கேட்கின்றது.
காங்கிரஸ் விருப்ப தொகுதிகள் பட்டியலில், கிள்ளியூர், விளவங்கோடு, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், பத்மநாபபுரம், விருதுநகர், ஆலங்குளம், காரைக்குடி, ராமநாதபுரம், தென்காசி, திருவாடனை, முதுகுளத்தூர், நாங்குநேரி, ஊத்தங்கரை, முசிறி, திருநெல்வேலி, மணப்பாறை, சோளிங்கர், சிதம்பரம், மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு, வேடசந்தூர், மதுரை மத்தி, கோவை தெற்கு, மதுராந்தகம், கலசப்பாக்கம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மேட்டூர், வேளச்சேரி, அம்பத்தூர், எழும்பூர், பொன்னேரி, மயிலாடுதுறை, கூடலூர், கும்பகோணம், ஊட்டி, சிவகாசி, விருத்தாசலம் ஆகிய 39 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், 5 தொகுதிகளை பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை வழங்கியுள்ளது. அதில், தளி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வால்பாறை, தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர், பவானிசாகர், பழனி, சிவகங்கை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளை பெற்றுள்ள ம.தி.மு.க.வும் 10 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை கொடுத்துள்ளது. அதில், மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, மணப்பாறை, சாத்தூர், வேளச்சேரி, கோவில்பட்டி, கடலூர், புவனகிரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், 2 தொகுதிகளை பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கடையநல்லூர், பாளையங்கோட்டை, பாபநாசம் ஆகிய 3 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை கொடுத்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில், 2 தொகுதிகள் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திருச்செங்கோடு, பொள்ளாச்சி, மொடக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் இருந்து 2-ஐ கேட்கிறது.
அதேபோல், 2 தொகுதிகளை பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி, ராமநாதபுரம், திருவாடானை, ஆம்பூர், பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், பாபநாசம் ஆகிய 5 தொகுதிகளில் இருந்து 2-ஐ கேட்கிறது.
இப்படி, தி.மு.க. கூட்டணியில் ஒரு பக்கம் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் தொகுதி பங்கீட்டை முடித்த கட்சிகள் விருப்பப்பட்டியலுடன் வந்து நிற்பதால், தி.மு.க. தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணலும் நடந்து கொண்டிருப்பதால், அதில் பங்கேற்கும் நிர்வாகிகள், முதலில் நாம் கேட்கும் தொகுதி, நம்கட்சி (தி.மு.க.) வசம் இருக்குமா? என்ற சந்தேகத்துடனேயே வந்து செல்கின்றனர்.
