சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்பாளர்கள் நேர்காணலில் கவனம் செலுத்தி வந்தார். இதனையடுத்து நாளை தவெகவின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டி
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ளார். ஆட்சியில் பங்கு என்பதை அறிவித்தும் தவெகவுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையத்துக்கு வரும் 28 ஆம் தேதி முதல் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதிக்கோரி கடிதம் எழுதப்பட்டது.
பெரம்பூரில் பரப்புரை துவக்கம்
நாளை மறுநாள் காலை பத்து மணிக்கு பெரம்பூரில் எம்கேபி நகர், கொளத்தூர் தொகுதியில் நண்பகல் 1 மணி, இரண்டு மணிக்கு வில்லிவாக்கம், அண்ணா நகர் பகுதிக்கு 3 மணி, விருகம்பாக்கம் தொகுதியில் நான்கு மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வேண்டி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு இடத்திலும் பிரச்சாரத்தில் 3 ஆயிரம் பேர் கலந்துக் கொள்வார்கள் எனவும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் ஆணையம் அனுமதி
இந்நிலையில் விஜய்யின் பரபர்ப்புரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து ஒரே நாளில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் போட்டியிட போவதாக பல தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த தொகுதியில் இருந்து விஜய் பிரச்சாரத்தை துவங்கவுள்ளார்.
இதன் மூலமாக விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் தேர்தல் தேதி அறிவித்த உடனே விஜய் ரோடு ரோடாக இறங்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பிப்பார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசி வந்தார். ஆனால் தேர்தல் தேதி அறிவித்த சில நாட்கள் கடந்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எந்த நிகழ்வும் முன்னெடுக்காமல் இருந்தது அக்கட்சியினரை பெரிதும் சோர்வடைய செய்தது.
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
இந்நிலையில் நாளை மறுநாள் முதல் விஜய் பரப்புரை துவங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தவெக தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மேலும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக சார்பாக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையில் விஜய் போட்டியிட போவதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இங்கு தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கிவிட்டு போட்டியில் இருந்து விலகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனையடுத்து விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
