கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருவாரூர் வடகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுள்ளார். தரிசனத்தை முடித்துவிட்டு, காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திருவாரூர் அருகே எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வாய்க்காலில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உள்ளே இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்க்காலில் விழுந்த கார் மீட்கப்பட்டது. இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமா அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நேரிட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
