திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலத்தில் ஏப்ரல் 9-ந் தேதி சட்ட மன்ற தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ள டுவென்டி-20 கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்சி சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் மலையாள திரைப்பட நடிகைகளான லட்சுமி பிரியா, அஞ்சலி நாயர், வீணா நாயர் ஆகியோர் தேர்தலில் களம் இறங்குகின்றனர்.
இதில் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போனித்துரா சட்டமன்ற தொகுதியில் நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து திருப்போனித்துரா அருகே கோடம்துருத்து பூர்ண திரேசியன் கோவில் அருகில், டுவென்டி-20 கட்சி தேர்தல் அலுவலகம் அமைத்து உள்ளது. இந்தநிலையில் நேற்று நடிகை அஞ்சலி நாயர் தனது கணவர் அஜித்துடன் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நடந்த கணபதி ஹோமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது நடிகை அஞ்சலி நாயர் பேசியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உலக தலைவராக விளங்குவதோடு, வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்தியா உலக அளவில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. கேரளத்திலும் அந்த மாற்றம் எதிரொலிக்க வேண்டும்.
கேரளத்தில் மாறி, மாறி ஆட்சி செய்த கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தவில்லை. திருப்போனித்துரா தொகுதி மக்களுக்கு மிகவும் அருகில் உள்ளேன். மத் திய அரசின் வளர்ச்சி திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வருவேன். திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பேன். என்னை நடிகையாக பார்க்க வேண்டாம். என்னை திருப்போனித்துராவின் மகளாக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
