நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. ‘தசரா’ படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் ‘முகில்பேட்டை’ மூலம் அறிமுகமான கயாடு லோஹர், மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றார். இதயம் முரளி, இம்மோர்டல், சிம்பு 49 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் ‘பவழ மல்லி ’பாடலில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் நடனமாடி அசத்தினார். நானியுடன் நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படம் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகவுள்ளது.
‘தி பாரடைஸ்’ படத்தில் சுப்பு என்கிற சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கயாது லோஹர் நடித்துள்ளார். இந்தப் படம் மிகுந்த பொருள் செலவில் உருவாகி வருகிறது. கடைசியாக ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற மலையாள படத்தில் டொவினோ தாமஸுடன் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை கயாது லோஹர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ‘தி பாரடைஸ்’ படக்குழு கயாது லோஹருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ‘தி பாரடைஸ்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
