கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு முதல் கட்ட விசாரணையை நடத்தினர்.
இதனையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தவெக தலைவரான விஜய்யிடமும் டெல்லியில் 2 முறை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி விஜய்யை மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு சிபிஐ சம்மன் அனுப்பியது. அன்றைய தினம் ஆஜராகாத விஜய் நேற்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். நெரிசல் ஏற்பட்டபோது மேடையில் இருந்து உடனடியாக அறிவிப்புகளை வெளியிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை? என்றும் கேட்கப்பட்டுள்ளது. அப்போது இந்த கேள்விகள் அனைத்துக்கும் விஜய் பொறுமையாக விளக்கமாக பதில் அளித்துள்ளார். மேலும் மிக முக்கியமாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு? என விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
அதாவது கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி பல குளறுபடிகளை ஏற்படுத்தியதால் தான் உயிரிழப்புக்கு காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், கரூர் சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு? எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு முன்வைக்கிறீர்கள்? என விஜய்யிடம் சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கேள்விக்கும் விஜய் செந்தில்பாலாஜி மீது சில குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் உரிய பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விசாரணை நிறைவடைந்த பின்னர் வெளியே வந்த விஜய், காரில் ஏறி நின்று தவெக தொண்டர்களுக்கு உற்சாகமாக கையசைத்துவிட்டு புறப்பட்டார்.

