பெங்களூரு,
காட்டில் வாழும் விலங்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியான குணங்களைக் கொண்டுள்ளன. மான் போன்ற சில விலங்குகள் அமைதியாக இருக்கும். புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் எப்போதும் ஒருவித ஆக்ரோஷத்துடனேயே இருக்கும். ஆனால் அவற்றைவிட மிக ஆக்ரோஷமான விலங்கு என்றால் அது நீர்யானை தான். இதற்கு முக்கிய காரணம் இதனுடைய அதிக எடை தான். மற்ற விலங்குகளைப் போல் நீர்யானை இறைச்சியை உண்ணாது. ஏனென்றால் இது ஒரு தாவர வகை விலங்கு.
நீர்யானைகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் குட்டியை ஈனும். குட்டியை ஈனுவதும், பாலூட்டுவதும் தண்ணீரில் தான். பொதுவாக நீர்யானைக் குட்டிகள் அனைத்தும் நீருக்கு உள்ளேயே பிறப்பதால், தனது முதல் மூச்சுக்காக நீரில் இருந்து மேலே வருகிறது. தனது வாழ்நாளில் பாதி நாட்களை நீரிலேயே கழித்தாலும் நீந்தத் தெரியாத விலங்கு இது. நீரில் இருக்கும் தாவர உண்ணிகளையும், நிலத்தில் இருக்கும் புல் உள்ளிட்ட தாவரங்களையும் உண்ணும். யானைக்கு அடுத்தபடியாக நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு நீர்யானை.
பொதுவாக முதலைகள், மற்ற விலங்குகளைத் தாக்கும் வல்லமை படைத்தவை. இருப்பினும் நீர்யானைகளைக் கண்டால் மட்டும் தாக்குதலைத் தொடுக்காமல் சற்று பின்வாங்கி விடும். ஏனென்றால் நீர்யானையை விடவும் முதலை பலமானது அல்ல. ஆக்ரோஷமான நீர்யானையின் எடை சுமார் 1,800 கிலோ. இதன் உயரம் 1.6மீ. நீர்யானைகள் 180 டிகிரி கோண அளவில் வாயைத் திறக்கும் திறன் பெற்றுள்ளன. நீர்யானையின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள். இவை கூட்டமாக வாழக் கூடியவை என்பதால் ஒரு கூட்டத்தில் குறைந்தபட்சம் 40 நீர்யானைகள் இருக்கும்.
இந்தநிலையில், கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள உயிரியல் பூங்காவில், நீர் யானை தாக்கியதில் பயிற்சி கால்நடை பெண் டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் சமீக்ஷா ரெட்டி (27), கர்ப்பமாக இருந்த நீர்யானையின் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தபோது, திடீரென அவரை தாக்கியது நீர்யானை. இதில் பலத்த காயமடைந்த டாக்டர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர்.
