கல்லாபெட்டி கூட்டணி கலகலத்து போய் நிற்கிறது: நெல்லை பிரசாரத்தில் திமுகவை கலாய்த்த விஜய்

நெல்லை,

நெல்லை தேர்தல் பிரசாரத்தில் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க. உங்கள் மகன், அண்ணன், தம்பி, தோழன், நண்பன் விஜய் உங்களை தேடி வந்திருக்கிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் முழு பவர் இருந்திருந்தால், இந்த கூட்டம் நடந்திருக்காது. இப்போது அவர் அதிகாரம் இல்லாத முதல்-அமைச்சர். அதனால், ஈசியாக வர முடிந்தது. நம் மீது எவ்வளவோ அவதூறு பரப்பினார்கள். தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி இரண்டும் வெளியே தனித்தனி. உள்ளே ஒன்றுதான். இரு கூட்டணிக்கும் ஒரே நோக்கம், மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்துவிடக்கூடாது. விஜய் வந்ததில் இருந்து, அவர்கள் ஊழல் செய்யமுடியாமல் போய்விட்டது. அதனால் என்மீது செம கோபத்தில் உள்ளனர்.

நான் வந்த பிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. கல்லாபெட்டி கூட்டணி கலகலத்து போய் நிற்கிறது. அதை ஒட்ட வைத்துக்கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டுபோடமாட்டார்கள் போல. பா.ஜ.க. மற்றும் பலர் கூட்டணியிலும் இதைவிட பிரச்சினை இருக்கிறது. நம் மீது காண்டில் இருக்கிறார்கள்.அதற்கு காரணம் அவர்கள் வீட்டிலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம்.

கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை திமுக பாக்கெட்டுக்குள்ள போட்டுக்கொண்டது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் நிற்கிறது. சிறுபான்மை மக்கள் நம்ம பக்கம் நிற்கிறார்கள். நான் கட்சி ஆரம்பித்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் போகவில்லை. வீட்டிற்குள் போய்விட்டுத்தான் கட்சியையே ஆரம்பித்தேன். மற்றவர்களுக்கு இது எலெக்‌ஷன். நமக்கு இது எமோஷன். எனக்கு ஒன்னுன்னா மக்களுக்கும், மக்களுக்கு ஒன்னுன்னா எனக்கும் கண்கள் கலங்கும்.

கரூர் விஷயத்தை பத்தி ஊருக்கே தெரியும். ஆனால் என் மேல பழி போடுறாங்க. விஜய் மீது இவ்வளவு பழியை போட்டும் அவருடன் மக்கள் நிற்கிறார்கள் என்று நினைத்தார்கள். அடுத்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். அடுத்து, நமக்கு மட்டும் தனியாக கன்டிஷன் போட்டார்கள் மக்களை சந்திக்கக்கூடாது என்று நினைத்தனர். அதுவும் எடுபடவில்லை. அடுத்து, சுற்றியுள்ளவர்களை வைத்து தேர்தல் நேரத்தில் பிரச்சினை செய்ய பார்த்தனர். அதுவும் நடக்கவில்லை. என்னை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது.

234 தொகுதியிலும் விஜய்தான் வேட்பாளர். நம்ம வேட்பாளர்கள் டாட்டா, பிர்லா கிடையாது. நம்ம வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்த விஜய்தான் வேட்பாளர். இதுவரை யார் யாருக்கே ஓட்டுபோட்டோம். இப்போது உங்கள் வீட்டில் உள்ளவருக்கே ஓட்டு போடுகிறோம். உங்களுக்கே ஓட்டுபோட்ட மாதிரி.

ஒரு காமராஜர், ஒரு அண்ணா, ஒரு எம்.ஜி.ஆர். தானா. அவர்போல யாரும் வரமாட்டார்களா என்று ஏங்கிய நேரத்தில்தான் நாம் வந்திருக்கிறோம். இந்த தேர்தலில் த.வெ.க. ஆட்சியை அமைக்கிறோம். ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், இளைஞர்கள் நன்றாக இருப்போம். விவசாயிகள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் நன்றாக இருப்போம். பல ஆண்டுகள் நம் சந்ததியே நன்றாக இருக்கும். ஓட்டை வேறு யாருக்காவது போட்டு, வீணாக்கிவிடாதீர்கள். செய்ய முடிகிறதைத்தான் செல்வோம்.

மக்களுக்கு தப்பே நடக்காது. தப்பே நடக்க முடியாது. மக்கள் காசில் இருந்து ஒரு பைசாவைகூட எடுக்கமாட்டேன். மற்றவர்களால் இதை தில்லா சொல்ல முடியுமா. உங்கள் (திமுக) ஆட்சி சரியாக இருந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா. நாங்குநேரி பிரச்சினை போதையால் நடந்ததாம். அதை ஏன் தடுக்கவில்லை. மணலை திருடுகிறார்கள். மலையை திருடுகிறார்கள்.

ஆட்சி முழுக்க ஊழலில் ஊறிப்போய் நாறிப்போய் கிடக்கிறது. எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்கிறீர்கள். பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்திற்கான தேர்தல். தி.மு.க.வாலோ, மற்றும் பலராலோ ஒன்னும் செய்ய முடியாது. வரும் 23-ந் தேதி தேர்தலில் விசில் சின்னத்துக்கு ஓட்டுபோடுங்கள். அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்துள்ளோன். இங்கு இருமுனை போட்டிதான். ஒன்று டி.வி.கே., இன்னொன்று டி.எம்.கே. ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள். இது விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link