சென்னை,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் 1.43 கோடி செலவில் கற்றனைத் தூறும் அறிவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிலையில் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சொல்லும் மெரினாவில் கல்வியின் பெருமையைச் சொல்லும் “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”!
குழந்தைகள் – மாணவர்கள் – இளைஞர்கள் – சுற்றுலாப் பயணிகள் கூடும் தமிழர் கடற்கரையான மெரினா நெடுக, உழைப்பாளர் சிலை – விடுதலை வீரர்கள் சிலைகள் – தமிழ் வளர்த்த ஆன்றோர் சிலைகள் உள்ளிட்ட சிலைகளுடன், தமிழ்நாட்டின் கல்விப் பெருமையைச் சொல்லும், “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”யைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர்கள் கல்வியை இறுகப்பற்றிக் கொண்டால் போதும், ஒருபோதும் நாம் வீழ மாட்டோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
