கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: கணக்கில் வராத ரூ.4.48 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை மேல பஜார் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நிலப் பத்திரப்பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையில், இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தின் அனைத்துக் கதவுகளையும் மூடிய போலீசார், ஒவ்வொரு அறையிலும் சல்லடை போட்டுச் சோதனை நடத்தினர். அலுவலகத்தின் உட்புறம் மற்றும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அதிகாரிகளின் வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது காருக்குள் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில், உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரொக்கப்பணத்தைப் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக சார்பதிவாளர் செல்லப்பாண்டியனிடம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையைத் தொடர்ந்து, சார்பதிவாளர் செல்லப்பாண்டியனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய இந்த அதிரடிச் சோதனை மற்றும் லட்சக்கணக்கில் பணம் சிக்கிய விவகாரம் கழுகுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link