காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி.. திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு – vck mp thirumavalavan announces 3 candidates for 2026 puducherry assembly election

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள், அதனை வாபஸ் வாங்காமல் உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி தேர்தல் சம்பந்தமாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

விசிக திருமாவளவன்
சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்துக்கு முன்பாக புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரி தேர்தலில் விசிக தனித்து போட்டியிட போவதாக விசிக எம்பி திருமாவளவன் அறிவித்த நிலையில், தற்போது விசிக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்கள் தொடர்பாக பட்டியலை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி தேர்தல்

தமிழ்நாட்டை காட்டிலும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிகமான பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது. குறிப்பாக திமுக, காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறிகள் நீடித்து வந்தது. இதனையடுத்து ஒரு வழியாக காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதனிடையில் தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்கு முன்பாகவே திமுக, காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
ஒரே தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்
குறிப்பாக இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் விசிகவுக்கு புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மூன்று தொகுதிகளை வழங்க வேண்டுமென திருமாவளவன் கோரிக்கை வைத்தார். ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்க முன்வராத காரணத்தால், விசிகவை சார்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள்.
தனித்து போட்டி
இதனால் விசிக சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட மூன்று இடங்களில் தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி உழவர்கரை, நெட்டப்பாக்கம் மற்றும் ஊசுடு தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிடும் எனவும் மற்ற இடங்களில் மதசார்பற்ற கூட்டணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் விசிக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் திருமாவளவன்.
திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதிலிருந்து உழவர்கரை ஒரு தொகுதியை விசிகவுக்கு திமுக ஒதுக்கியது. அங்கு ஆர்.எஸ்.எஸ், பாஜகவை சார்ந்தவரும், சமீபத்தில் பாஜகவில் இருந்து ஒதுங்கி காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவரை வேட்பாளாராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.
புதுவை காங்கிரஸ் வாபஸ் பெற மறுப்பு
விசிகவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்ட பிறகும் கூட புதுவை காங்கிரஸ் அவரை வாபஸ் பெற வைக்காமல் மறுக்கிறது. இதனால் புதுசேரியில் விசிகவுக்கு காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி உள்ளதா இல்லையா என்ற தெளிவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணியுடன் வேட்புமனுக்களை திருப்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ளது.
மூன்று தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பையும் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. எனவே வேறு வழியில்லாமல் விசிக வேபுமனுத் தாக்கல் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். அதன்படி ஊசுடு தொகுதிக்கு பெ. அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன், நெட்டப்பாக்கத்திற்கு ப. அமுதவன் மற்றும் உழவர்கரை தொகுதியில் செல்வ.புஷ்பலதா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.