காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் 'சீட்' கொடுத்தால் பாதிப்பு நமக்குத்தான்: திமுக மூத்த நிர்வாகிகள் 'திடீர்' போர்க்கொடி

சென்னை,

தமிழகத்தில் இன்னும் 2 மாத இடைவெளியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்பாக தயாராகிவருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தொடர்கிறது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா ‘சீட்’, உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் ஒதுக்கீடு என பல்வேறு கோரிக்கைகளை கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க.விடம் முன்வைத்து வருகின்றது.

தி.மு.க. மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி

காங்கிரஸ் கட்சியில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கடந்த டிசம்பர் மாதமே குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க.வில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் தமிழக வருகையும் தள்ளிக்கொண்டே போகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மூத்த தி.மு.க. நிர்வாகிகள், ”காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் ‘சீட்’ கொடுத்தால் பாதிப்பு நமக்குதான்.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இப்போது கேட்பதுபோல் 41 தொகுதிகள் கொடுத்தோம். அதில், 8-ல் தான் வெற்றி பெற்றார்கள். அந்தமுறை நாம் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு அவர்கள்தான் காரணம். எனவே, இந்த முறையும் அதே தவறை நாம் செய்துவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் நமக்குதான் பாதிப்பு” என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம்.

மு.க.ஸ்டாலின் யோசனை

இதனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் யோசித்து வருகிறாராம். அதனால்தான், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு தயாராக இருந்தாலும், தி.மு.க. ஆர்வம் காட்டாமல் மற்றொரு பக்கம் தே.மு.தி.க.விடம் பேச்சு வார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறதாம். அதற்காக, திருவனந்தபுரம் வரை சென்று பிரேமலதாவை முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வந்திருக்கிறார்களாம். இதனால், தி.மு.க.வின் கூட்டணி கணக்கு இந்த முறை மாறும் என்று சொல்லப்படுகிறது.

Source link