ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டி
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதில் மிகப்பெரிய அளவில் முக்கிய பங்கு வகித்தார். இதனிடையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு பின்பாக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அவரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என கேள்விகள் எழுந்தது.
செல்வப்பெருந்தகை விளக்கம்
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த ஸெல்வப்பெருந்தகையிடம், சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் தலைவர் பணியை ராஜினாமா செய்யப்போவதாக சொன்ன முடிவை மறுபரீசிலனை செய்வீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, எங்கள் தொகுதி மக்கள் என்னை பற்றி கேட்டார்கள். உங்களை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது என்றார்கள். அதனால் தான் என்னுடைய தொகுதி மக்களிடம் நீங்க விரும்பினால், எனது முடிவை தலைவரிடம் கூறுவேன் என்று சொன்னேன் என தெரிவித்துள்ளார்.
தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா
முன்னதாக தலைவர் பதவி வகித்த காரணத்தால் மக்களுடன் தொடர்ந்து வைத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பிள்ளையாக இருந்த நான், இனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக இருக்க போகிறேன் என்றார். இந்நிலையில் தற்போது தொகுதி மக்கள் தன்னை பார்க்க முடியவில்லை என்று கூறியதால் தான், ராஜினா செய்ய போவதாக சொன்னதாக தெரிவித்துள்ளார். இதனால் செல்வப்பெருந்தகை தலைவர் பதவியில் தொடர்வாரா அல்லது விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ராகுல் காந்தி பரப்புரை
இதனிடையில் கேரளா, புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பரப்புரை மேற்கொண்ட வருகிறார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து அவர் எப்போது தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வருவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளனர். இதுக்குறித்து தற்போது செல்வப்பெருந்தகை கூறுகையில், ராகுல் காந்தி இன்று புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை கேரளாவில் பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் இன்னும் இரண்டொரு நாட்களில் தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். பிரியங்கா காந்தி அவர்களும் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயலுக்கு பதிலடி
மேலும், சமீபத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பற்றி வைத்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை. இதுப்பற்றி அவர் பேசுகையில், பாஜக ஆட்சி செய்யும் உபி போன்ற மாநிலங்களில் போய் பார்க்க சொல்லுங்க. அவர்களுடைய ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டை பேச சொல்லுங்கள். முன்னாடி இருந்த ஆட்சியை விட, இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன. சில சமூக விரோதிகள் செயலால் ஏதாவது நடந்தால், சட்டம் ஒழுங்க சரியில்லை என்று கூறுவதா? தொடர்ந்து அவதூறு, அகங்காரம், ஆணவம் மட்டும் பியூஷ் கோயலின் பேச்சில் உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதனிடையில் தமிழ்நாட்டுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக முதல்வர்கள், அமைச்சர்கள் பரப்புரை மேற்கொள்ள வருகை தரவுள்ளனர். இதுக்குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், எப்படியாவது தமிழ்நாட்டில் கால் ஊன்றலாமா என்று பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இங்கு இடமில்லை. அதிமுகவுடன் முகமூடி அணிந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உகந்த மண் கிடையாது தமிழ்நாடு என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
