காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 22 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் காங்கிரஸ், பாஜக இன்னமும் தங்கள் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பை வெளியிடாமல் இருக்கின்றனர். இதனிடையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ,கிரிஸ் சோடங்கர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். அதே நேரம் வேட்பாளர்களை தேர்வு வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
மாணிக்கம் தாகூர் ராஜினாமா
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி தேதி என்பதால், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் தமிழ்நாட்டு தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் தேர்வில் நீடிக்கும் இழுபறிகள் காரணமாக தனது பதவியை மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சியில் பங்கு
இதற்கான கடிதத்தை மல்லிகார்ஜுனா கார்கேவிடம் வழங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த முடிவு அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாணிக்கம் தாகூரின் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் வழங்க வேண்டுமென மும்முரம் காட்டிய அவர், ஆட்சியில் பங்கு என்பதையும் முன்வைத்தார்.
தவெகவுடன் கூட்டணி
இதற்கு திமுக தரப்பில் இருந்து சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்த மாணிக்கம் தாகூர் திமுக இல்லையென்றால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்றார். அவரை போல் சில காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களும் தவெகவுடன் செல்வதற்கு ஆர்வம் காட்டினார்கள்.
இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியானது. இந்நிலையில் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களின் தலையீடு காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. இதனையடுத்து மாணிக்கம் தாகூரும் கட்சியின் தலைமை முடிவை ஏற்பதாக தெரிவித்தார். ஆனாலும் அதன்பின்னர் சோஷியல் மீடியாவில் அவர் தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய பேசுபொருளானது.
செல்வப்பெருந்தகை தயார் செய்த வேட்பாளர்கள் பட்டியல்
இந்நிலையில் தற்போது தேர்தல் பொறுப்பை மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி தலைமைக்கு கொடுத்த வேட்பாளர்கள் பட்டியலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்பி ஜோதிமணியும் அதிருப்தி தெரிவித்து, டெல்லி தலைமையிடம் பேசினார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிவது குறிப்பிடத்தக்கது.
