புதுடெல்லி,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் – 28, தே.மு.தி.க. – 10, விடுதலை சிறுத்தைகள் – 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5, இந்திய கம்யூனிஸ்ட் – 5, ம.தி.மு.க. – 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2, முக்குலத்தோர் புலிப்படை 1, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. – 1, தமிழர் தேசம் கட்சி – 1 என கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதால், இதுவரை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடியதாக எழுந்த தகவலால் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கீணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
