கின்ஷாசா,
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கோவில் காங்கோ ஜனநாயக குடியரசு என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பாகும்.
இந்த பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் காங்கோவின் இடுரி மாகாணம் மாம்பசா நகரின் பஹ்வாடொ கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். பொதுமக்களின் வீடுகளையும் தீவைத்து எரிந்தனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர் கிராமத்திற்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
