திமுகவின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் நான்கு முனை போட்டி உருவாகி இருக்கிறது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம். வலுத்து வரும் இந்த நான்கு முனை போட்டியில் வருகிற தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்? தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை யார் பிடிக்க போகிறார் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன?
வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் . அடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி இருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி
திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் கனிமொழி எம்.பி வருகிற இரண்டாம் தேதி மானா மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதேபோலவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். காஞ்சிபுரத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கியவர் அறிஞர் அண்ணாவின் இல்லத்திற்கு சென்று அவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வாக்குறுதிகளை சொல்லி வாக்கு கேட்ட உதயநிதி
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தியே பிரச்சாரத்தை மேற்கொண்டார் உதயநிதி. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் பிரச்சாரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி என கூறியிருந்தார்.
மேலும் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் இந்த தேர்தலில் பாஜகவையும் அதிமுகவையும் விரட்டியடிப்போம் என பேசியிருந்தார். மேலும் ஒன்றிய பாஜக அரசின் திட்டத்தில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை எனக்கூறிய அவர் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் கூட அதில் இல்லை என குற்றம்சாட்டினார்.
திமுக அறிக்கைகளை குறிப்பிட்டு பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும், காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுப்படுத்தும் மற்றும் புதுமைப் பெண் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என நமது முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார் அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என கூறினார். தொடர்ந்து அவர் திமுக ஆட்சியில் காஞ்சிபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது எனவும், காஞ்சிபுரத்திற்கு முனிசிபாலிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது எனவும் கூறினார்.
முரட்டு அடிமை எடப்பாடி
தொடர்ந்து பேசிய அவர் “எடப்பாடி பழனிச்சாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் இருந்தான் தனது பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். மோடியும் அமெரிக்காவும் ஒரே கொள்கையை கொண்டவர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது” என அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஜாடிக்கேத்த மூடி என்பது போல மோடிக்கு ஏற்றவாறு எடப்பாடி தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என விமர்சித்த அவர் பாஜகவிற்கு முரட்டு அடிமையாக இருக்கும் அதிமுகவை விரட்டி அடிக்க வேண்டிய தேர்தல் இது எனவும் டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே “அவுட் ஆப் கண்ட்ரோல் தான்” என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தல் ஆகும். தமிழகத்தில் 4 முனை போட்டி என்பதால் திமுகவுக்கு ஆதரவான சூழல் அமையும் என சொல்லப்பட்டாலும், தேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை மாநிலத்தில் நிலவிய சட்டம் -ஒழுங்கு பிரச்சனை மற்றும் மக்கள் போராட்டங்கள் என அனைத்தையுமே கருத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் விமர்சகர்கள்.
