காணாமல் போனதாக தேடப்பட்ட கல்லூரி மாணவி கால்வாயில் பிணமாக மீட்பு

திருச்சூர்,

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவனூர் அருகே பாண்டியாட்டு வீட்டை சேர்ந்தவர் அரவிந்தாக்ஷன். இவரது மகள் அனுப் பிரியா(வயது 25). இவர் லாலூர் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி அனுப் பிரியா சென்றார்.

கல்லூரி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கல்லூரி மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது அனுப் பிரியாவுடன் படிக்கும் சக மாணவி, கல்லூரி அரை நாள் மட்டுமே நடந்தது, 12.30 மணிக்கு நானும், அனுப் பிரியாவும் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது அனுப்பி ரியா திருச்சூர் வடக்கு பஸ் நிலையத்திற்கு சென்றதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பஸ் நிலையம் உள்பட சுற்றுவட்டார இடங்களில் தேடியும் அனுப் பிரியா கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். இதுகுறித்து உடனே திருச்சூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிதரனிம் புகார் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மாணவியை தேடிவந்தனர்.

அதில் அனுப் பிரியாவும், சேலக்கோட்டுக்கரா பகுதியை சேர்ந்த நீலஜ் நீலங்காவில் என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து அவர்களது காதலுக்கு நீலஜின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனுப் பிரியாவின் பாடப்புத்தகத்தில் இருந்த ஒரு கடிதம் போலீசார் வசம் கிடைத்தது. அந்த கடிதத்தில் தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீலஜூம், அவரது குடும்பத்தினர் தான் பொறுப்பு என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

இந்தநிலையில் காணாமல் போனதாக தேடப் பட்ட அனுப்பிரியா மணித்தரா பகுதியில் உள்ள அணை கால்வாய் தண்ணீரில் இறந்த நிலையில் உடல் மிதந்து காணப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கால்வாயில் பிணமாக மிதந்த அனுப் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது சரியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link