காமேனி மரணத்தின் 40-ம் நாள்: நாடு முழுவதும் இரங்கல்; ஈரான் அதிபர் பங்கேற்பு

தெஹ்ரான்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், மினாப் நகரில் உள்ள பள்ளியை சேர்ந்த குழந்தைகள் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், அயதுல்லா சையது அலி காமேனி மறைந்து 40 நாட்கள் ஆன நிலையில், நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள குடியரசு சதுக்கத்தில் அதற்கான நினைவு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் கலந்து கொண்டார். தேசிய அளவிலான இரங்கல் நிகழ்ச்சியின்போது, திரளான கூட்டத்தினர் தெருக்களில் திரண்டனர். அவர்கள் பேரணியாக, காமேனி மறைந்த இடத்திற்கு நடந்து வந்தனர். மினாப் நகரில் உள்ள பள்ளி குழந்தைகள் 180-க்கும் மேற்பட்டோர் மறைவுக்காகவும் நடந்த இந்த நிகழ்ச்சி இரவு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியும், மறைந்த தலைவர் காமேனியின் கொள்கைகளை அறிவிக்கும்போது அவற்றை கவனித்து கேட்டனர். இந்த கருத்துகளுக்கு இணங்க நடப்போம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

ஈரான் முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களிலும், கவுன்டிகளிலும் அவர்கள் இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஈரானில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

6 வார தாக்குதலை அடுத்து, ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துகிறோம் என்று அமெரிக்கா அறிவித்தது. இது 2 வாரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Source link