காரைக்குடி வேட்பாளர்கள்
காரணம் என்னவென்று பார்த்தால், காரைக்குடி தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே இருக்கிறார். அவரைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியும், தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் தவெக வேட்பாளருமான டி.கே. பிரபு ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் அந்தந்த தொகுதிகளில் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை விமர்சித்தும், தங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் எந்த மாதிரியான நிலை உருவாகும் என்பது குறித்தான தேர்தல் வாக்குறுதிகளையும் மக்கள் முன்னிலையில் அந்தந்த கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் சமீபத்தில் காரைக்குடி சென்று இருந்த போது அக்கட்சி வேட்பாளர் டி.கே. பிரபுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சீமான் மீது விமர்சனம்
ஆனால் தொடக்கத்தில் இருந்தே நாதக வேட்பாளர் சீமானை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சீமானை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு கூட சீமானுக்கும் காரைக்குடி தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பியிருந்தார்.
பெரம்பூரில் ரியல் போட்டி…எந்த கட்சி முந்துகிறது?
தனது சொந்த மாவட்டம் சிவகங்கை என்று சீமான் கூறிவரும் நிலையில், அவர் உள்ளூர் காரர் கிடையாது, அங்கு அவருக்கு வாக்கும் கிடையாது, நிரந்தர முகவரியும் கிடையாது, தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போவார் என்பது போன்ற விமர்சனங்களை கார்த்தி சிதம்பரம் முன் வைத்தார்.
நட்சத்திர வேட்பாளர் சீமான்
ஆனால் காரைக்குடி தொகுதியை பொருத்தமட்டில், நட்சத்திர வேட்பாளராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே ஜொலிக்கிறார். அந்த ஒரு காரணம் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற போதாது என மாற்றுக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி மக்கள் மாற்றம் தேவை என்று விரும்பினாலும், அதற்கு நம்பிக்கையான ஒரு எம்எல்ஏவையே எதிர்பார்த்து வருகின்றனர்.
விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினர்
கடந்த முறை சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சீமான், இந்த முறை தொகுதியை மாற்றி தனது தேர்தல் வியூகத்தை தொடங்கி இருக்கிறார். அவருக்கான செல்வாக்கு இந்த முறை அதிகமாகும் என நாம் தமிழர் கட்சியினர் எதிர்பார்த்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, நான்காவதாக தவெக களம் இறங்கி இருக்கிறது.
இளம் தலைமுறையினரின் வாக்குகள் தவெக வசம் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறினாலும், காரைக்குடி தொகுதியை பொருத்தமட்டில் நட்சத்திர வேட்பாளர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அதுவும் சீமான் மட்டுமே இருக்கிறார்.
இதன் காரணமாகவே சீமான் மீது ஆளும் கட்சி திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவதாக கள நிலவரம் கூறுகின்றன.
