கால்பந்து தேசம் கிரிக்கெட்டிலும் தனது முத்திரையை பதிக்கிறது – சச்சின் டெண்டுல்கர்

புதுடெல்லி,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 17வது ஆட்டத்தில் நேபாளம் – இத்தாலி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மேனின்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இத்தாலி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நேபாளம் அணி தடுமாறியது. இதனால் நேபாளம் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஆரிப் ஷேய்க் 27 ரன்கள் எடுத்தார். இத்தாலி அணியில் கிரிஷான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 124 ரன்கள் இலக்குடன் இத்தாலி அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜஸ்டின் மோஸ்கா, அந்தனி மோஸ்கோ இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி இருவரும் ரன்கள் குவித்தனர். பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். இருவரும் அரைசதமடித்து அசத்தினர். இதனால் 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இத்தாலி வெற்றி பெற்றது. இது இத்தாலி அணிக்கு முதல் உலகக் கோப்பை தொடராகும். அதன்படி உலகக் கோப்பை தொடரில் இத்தாலி பெற்ற முதல் வரலாற்று வெற்றியாகும்

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

டி20 உலகக்கோப்பையில் ஆதிக்கத்துடன் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ள இத்தாலிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஒரு பெருமைமிக்க கால்பந்து தேசம் கிரிக்கெட்டிலும் தனது முத்திரையைப் பதிப்பது, கிரிக்கெட் உலகம் முழுவதும் எவ்வளவு அழகாகப் பரவி வருகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link