சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (14.03.2026) மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆஸ்திரேலியா துணைத் தூதரகம் இணைந்து சென்னை பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வழங்கினார்.
இந்நிகழ்வில் மேயர் தெரிவித்ததாவது :
பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், கல்வித்துறைக்கென்று அதிக நிதி ஒதுக்கீடு செய்து, மாணவர்கள் கல்வியினை சிறப்பாகவும், ஆர்வமுடனும் கற்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் காட்டும் வகையில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறாக, சிறப்பு திட்டங்கள் துறை மூலமாக சென்னை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உலகதரம் வாய்ந்த கால்பந்து பயிற்சியினை வழங்கிடும் வகையில் 2025-26ஆம் நிதியாண்டில் ஆஸ்திரேலியா துணைத் தூதரகத்தின் மூலம் திருமலை அறக்கட்டளையின் (Great Goals) நிறுவனத்தின் சார்பில் சென்னை பள்ளிகளில் கால்பந்து பயிற்சி திட்டம் சிறப்பாக வழங்கப்பட்டது. சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர் பயிற்சி, விளையாட்டு மற்றும் பாடத்திட்டத்திற்கு இணையான செயல்பாடுகள் ஆகியவற்றில் முழுமை பெற்ற பள்ளிகளாக மாற்றும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி மற்றும் சென்னை பள்ளிகள் ஆகியவை இணைந்து இச்சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் 2025-26ஆம் கல்வியாண்டில் நியூ மார்க்கெட் மற்றும் கோட்டூர் சென்னை மேல்நிலைப் பள்ளிகள் சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் கால்பந்து பயிற்சியினை தொடங்கி வைத்தார். இம்மாணவர்களுக்கு மண்டல அளவில் சென்னை பள்ளிகளுக்கு இடையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது
இப்பயிற்சியின் போது மாணவர்களுக்கு திறன் பயிற்சி, உடல் தகுதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் வாரம் இருமுறை தகுதி வாய்ந்த பயிற்றுநகர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு ஜிசிசி முத்திரையிடப்பட்ட டி-சர்டுகள், காலணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் பயிற்சி பெற்ற நியூ மார்க்கெட்-சென்னை உயர்நிலைப் பள்ளியைச் சார்ந்த 20 மாணவர்களும், கோட்டூர்-சென்னை உயர்நிலைப் பள்ளியைச் சார்ந்த 20 மாணவர்களும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 30 மாணவர்கள் என மொத்தம் 70 மாணவர்கள் மண்டல அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு தேர்ச்சி பெற்றனர்.
இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடித்த சென்னை பள்ளிகளைச் சார்ந்த 70 மாணவர்களுக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, ஆஸ்திரேலிய தூதகரகத்துடன் இணைந்து, சென்னை பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் மற்றும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கால்பந்து பயிற்சித் திட்டம் சிறப்பாக வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த. விசுவநாதன், ஆஸ்திரேலிய துணைத் தூதரக துணை உயர் ஆணையர் சிலை ஜக்கி (Silai Zaki), திருமலை அறக்கட்டளையின் Great Goals நிறுவனர் பிரியா கோபால், துணை நிறுவனர் சந்தியா ராஜன், கல்வி அலுவலர் ஜெ. வசந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
