காவல் நிலையங்களில் எதிரொலிக்கும் சாத்தான்குளம் தீர்ப்பு.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை! – sathankulam verdict reflected in police stations actions taken by officials

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியதாக செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்து அவர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலைய கொலை வழக்கு இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு வரலாற்று தீர்ப்பளித்தது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 9 காவலர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் அபராதத்துடன் கூடிய இரட்டை தூக்கு தண்டனையை நீதிபதி முத்துக்குமரன் வழங்கினார்.

காவல்துறையினர் அதிர்ச்சி

உண்மையில் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பல சம்பவங்களின் போது காவல்துறையினர் கொல்லப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் இதுபோன்ற தண்டனைகளை தருகிறதா என்று கேள்விகளையும் சில காவலர்கள் எழுப்பி வருவதாக சில ஊடகங்கள் எழுதி வருகின்றன. தொடர்ந்து இந்த சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கம்பிகள் பிளாஸ்டிக் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அறிவியல் ரீதியாக பல விசாரணை முறைகள் நடைமுறையில் உள்ள இந்த காலகட்டத்தில் அடித்து உண்மையை வரைவிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை எனவும் சில தரப்பு காவலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் அனுமதியின்றி போலீஸ் நிலையங்களில் லத்தியை எடுக்கக் கூடாது என காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சூழலில்தான் இந்த ஒன்பது காவலர்களுக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் நீதிமன்றம் அளித்துள்ள இரட்டை தூக்கு தண்டனையின் அடிப்படையில் பார்த்தால் இவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தீர்ப்பு விவரம்

  • போலீசாரை கோபத்தில் ஜெயராஜ் பேசினார் என்பதற்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பழிவாங்கும் நோக்கில் அடித்துக் கொலை செய்து இருக்கின்றனர்.
  • தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்திருக்கின்றனர்.
  • சட்டம் வழங்கிய அதிகாரத்தை காவல்துறையினர் தவறாக பயன்படுத்தி இருக்கின்றனர்.
  • இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் 14 ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளியில் வந்து விடலாம் என்ற தவறான எண்ணம் உருவாகிவிடும்.
  • சாத்தன் குளம் கொலை வழக்கின் பிரேத பரிசோதனை குறித்த வீடியோ பதிவையும் புகைப்படத்தையும் பார்க்கும்போது குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வராது.
  • இந்த குற்றத்தை எதிர்காலத்தில் செய்ய எவரும் அச்சப்படும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என இந்த கோர்ட்டு கருதுகிறது.
  • அரிதிலும் அரிதான வழக்கு என்று பிரிவுக்குள் கொண்டு வருவதன் மூலமே இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்
  • காவல் நிலைய மரணங்கள் என்பது மனித உரிமை மீறலின் உச்சம்.
  • 2011 ஆம் ஆண்டிலேயே காவல் நிலையம் மரணங்கள் கொடூரமானது மரண தண்டனை விதிக்க தக்கது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
  • இந்த வழக்கை பொறுத்தவரை யார் அதிக காயங்களை ஏற்படுத்தினார் என்பதை பார்ப்பதை காட்டிலும் ஒருமித்த கருத்துடன் கூட்டாக இணைந்து இந்த குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதனாலேயே 9 -பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்ட்டுள்ளதாக நீதிமன்றத்தின் விரிவான தண்டனை விவரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link