சட்டமன்ற தேர்தலுக்காக கோவை வடக்கு, கிணத்துக்கடவு, சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என பாஜகவினர் பெரிதும் எதிர்பார்த்தனர். இதற்காக தொகுதிகள் அறிவிக்கப்படும் முன்பாகவே பணிகளில் இறங்கினார்கள். ஆனால் கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதால், பாஜகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்தான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த லிஸ்டில் பாஜகவினர் அதிகம் எதிர்பார்த்த கிணத்துக்கடவு இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பாஜகவை சார்ந்தவர்கள் கடுமையாக அப்செட் அடைந்தனர். இதனையடுத்து கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குமாறு போராட்டாம் வெடித்துள்ளது.
கிணத்துக்கடவு தொகுதி
ஈச்சனாரியில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கிணத்துக்கடவை பாஜகவுக்கு ஒதுக்கக்கூறி போராட்டம் செய்துள்ளது. அப்போது தொண்டர் ஒருவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியில் வேலைகளும் நடந்தது.
போராட்டத்தில் குதித்த பாஜகவினர்
ஆனால் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அதிமுகவினர் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலில் கிணத்துக்கடவு இடம்பெறவில்லை. இது பாஜகவினரை கடுமையாக ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இதனால் கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு வழங்குவதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. கூட்டணியில் வெடித்துள்ள இந்த பிரச்சனை அதிமுகவுக்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.
இதனிடையில் பாஜகவுக்கு கோவை வடக்கு, மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி, திருப்பூர் தெற்கு, கந்தர்வக்கோட்டை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, சாத்தூர், வாசுதேவநல்லூர், திருச்செந்தூர், ராதாபுரம், விளவங்கோடு, நாகர்கோவில், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ஆவடி, திருவாரூர், அறந்தாங்கி, குளச்சல், ராமநாதபுரம், மானாமதுரை, ராசிபுரம், பத்மநாபபுரம், தளி மற்றும் மயிலாப்பூர் ஆகிய 27 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன்
மேலும் இந்த முறை பாஜகவில் சிலர் தொகுதி மாறியும் போட்டியிட உள்ளனர். கடந்த தடவை கோவை தெற்கில் போட்டியிட்டு ஜெயித்த வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கில் போட்டியிட உள்ளார். சாத்தூர் தொகுதியில் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடவுள்ளார். அவருக்கு ஆதரவாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோவை வடக்கு
இந்நிலையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கவுள்ள நிலையில் கிணத்துக்கடவு பகுதியை தங்களுக்கு ஒதுக்க மறுபரிசீலனை செய்யுமாறு பாஜகவினர் போராட்டத்தில் குதித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அதிமுகவினர் மற்றும் வேலுமணி இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதால் வானதி சீனிவாசன், அண்ணாமலை இருவரில் யார் அங்கு போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
