சென்னை,
கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் பெருநகர சென்னை மாநகராட்சியானது இதன் உட்கட்டமைப்புகளைப் பராமரித்து தனது மேம்பட்ட சேவையினை வழங்கிடும்
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பரந்து விரிந்த பகுதியாகத் திகழ்கிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 6300 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் 1000 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும், சாலைகள், மழைநீர் வடிகால்வாய்கள், நீர்வழிக் கால்வாய்கள், மின்விளக்குகள், பாலங்கள், சமுதாயக் கூடங்கள், பூங்காக்கள், குளங்கள் மேம்பாடு, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என மக்களுக்குத் தேவையான அனைத்து உட் கட்டமைப்பு வசதிகளையும், கல்வி, மருத்துவத்திற்கான சேவைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பாக வழங்கி வருகிறது.
முதல்-அமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெருகிவரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி , மாநகராட்சி தனது சேவையினை சிறப்பாக வழங்கி வருகிறது.
சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்து உற்பத்தி மற்றும் இதர தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (SIDCO) கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில், மாநகராட்சியின் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனது மேம்பட்ட சேவையினை, இந்த தொழிற்பேட்டைகளுக்கும் வழங்கிடும் வகையில், இதன் உட்கட்டமைப்புகளைப் பராமரித்திட பெருநகர சென்னை மாநகராட்சியானது சிட்கோவிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தால் 1167 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டமைக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் 404.08 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டமைக்கப்பட்ட கிண்டி தொழிற்பேட்டைகளில் கீழ்காணும் அளவீட்டிலான சாலைகள், தெரு விளக்குகள், உயர்மின் கோபுர விளக்குகள், மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.
தொழிற்பேட்டை அமைவிடம் சாலை எண்ணிக்கை சாலையின் நீளம் (கி.மீ) தெரு விளக்குகள் எண்ணிக்கை உயர்மின் கோபுர விளக்குகள் எண்ணிக்கை மழைநீர் வடிகால் நீளம் (கி.மீ) சேகரமாகும் திடக்கழிவு (டன்னில்) நாளொன்றுக்கு
அம்பத்தூர் 128 41.38 1558 8 84 40
கிண்டி 82 15.28 344 2 23.50 20
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக,கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் பெருநகர சென்னை மாநகராட்சியானது இதன் உட்கட்டமைப்புகளைப் பராமரித்து தனது மேம்பட்ட சேவையினை வழங்கிடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
