கிரிக்கெட் வர்ணனையில் இருந்து லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஓய்வு

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து தன்னை பிசிசிஐ புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த அதிரடி முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் போடும் நிகழ்வு மற்றும் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழா ஆகியவற்றில் வர்ணனை செய்ய பிசிசிஐ என்னை அனுமதிக்கவே இல்லை. ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே போன்றவர்களுக்கும், புதிதாக வர்ணனைக்கு வருபவர்களுக்கும் மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனது சுயமரியாதையை இழந்து என்னால் யாருக்கும் அடிபணிந்து கிடக்க முடியாது என்று தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எனது இந்த ஓய்வு ஒரு நீண்ட கதையின் தொடக்கம் மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும்போது பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். பிசிசிஐ இதை நம்ப முடியாமல் திகைத்து நிற்கும்.

ஒரு ரசிகர், “நீங்கள் கருப்பாக இருப்பதால் உங்களை பரிசளிப்பு நிகழ்வில் அனுமதிக்கவில்லையா?” எனக் கேட்டதற்கு, “நீங்கள் சொல்வது சரி. நிற பாகுபாடுதான் எனக் கூறி இருக்கிறார். 1985 உலக சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாகச் செயல்பட்ட லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், இந்தியாவுக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 26 மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது விலகல் குறித்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஓ நோ இந்த ஐபிஎல் தொடரில் ஏன் நீங்கள் இல்லை? எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Source link