தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கியுள்ளார்.
இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.
அடுத்ததாக 2026–2027 ஆண்டுக்கான தனது போட்டி திட்டங்களை அஜித்குமார் வெளியிட்டிருந்தார். அதன்படி, கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடர், மிஷெலின் லீ மான்ஸ் கப் மற்றும் ஆசிய லீ மான்ஸ் கோப்பை போன்ற முக்கிய சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தொடங்கிய கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரின் முதல் சுற்றில் அஜித்குமார் ரேசிங் அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. 12 மணி நேரம் நடைபெற்ற இறுதி போட்டியில் 13வது இடத்தில் தொடங்கிய அணி, கடைசியில் 9வது இடத்தை பிடித்து முன்னேற்றம் காட்டியது.
இந்த போட்டியை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி வரை நடைபெறும் பல சர்வதேச போட்டிகளிலும் அஜித்குமார் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
