கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயம்

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் 10 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று உள்ளன. இங்கு சுமார் 2,600 ஆண்டுக ளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

அகழாய்வு நடைபெற்ற கீழடி பகுதியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க சுமார் 4.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்பு அங்கு 65 ஆயிரத்து 380 சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்த புதிய திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள், மாணவ- மாணவிகள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்தநிலையில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட அரசு கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. அதன்படி பெரியவர்களுக்கு ரூ.20-ம், 5 முதல் 12 வயது உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு ரூ.10-ம், மாணவர்களுக்கு ரூ.5-ம், வெளிநாட்டினர் பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறுவர்-சிறுமிகளுக்கு ரூ.25-ம், புகைப்படம் எடுக்க ரூ.30-ம், வீடியோ பதிவு செய்ய ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திறந்தவெளி அருங்காட்சியகத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் பார்வையிடலாம். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link