மதுரை,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.
மேலும் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. சுமார் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருந்த நீர்த்தேக்கம், தற்போது 2 சதுர கிலோ மீட்டராக குறைந்து குளம் போன்ற நிலைக்கு மாறியுள்ளது.
இந்த நிலையில் தினமும் 72 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்படுகிறது. தற்போது அணையில் 518 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.
இதற்கிடையில், மதுரை சித்திரை திருவிழாவில் நடைபெறும் கள்ளழகர் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் வழக்கமான அளவில் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
