சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில், 14 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதற்கான கொடூர சாட்சி இது. 14 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறும் அளவுக்கு, தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது என்பது, மிகப்பெரிய அவமானம்.
தனது கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானத்திற்காக, நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக புறக்கணித்திருக்கிறது திமுக அரசு. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது திமுக அரசு.
தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள், சமூக விரோதிகளுக்கு, காவல்துறை மீதோ, திமுக அரசின் மீதோ சுத்தமாகப் பயமில்லை என்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சிதைந்து, குற்றவாளிகள் பயமின்றித் திரியும் “Lawless State” ஆக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக அரசு. ஐந்து ஆண்டுகளில், தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது.
நமது குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கையில், கொஞ்சம் கூட வெட்கமின்றி, விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டம் ஒழுங்கைக் கையாளத் தெரியவில்லை என்றால், தயவு செய்து வீட்டுக்குக் கிளம்புங்கள் முதல்-அமைச்சரே. போதும் உங்கள் ஐந்து ஆண்டு கால அலங்கோல ஆட்சி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
