கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலை

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக அண்ணாமலை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது முதற்கட்ட தேர்தல் பிரசாரம் விவரம் வெளியாகி உள்ளது. இது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்.

அவரது முதற்கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (09.04.2026) மாலை , பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி, சூலூர் ஆகிய தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தை மிக மோசமான நிலையில் தள்ளியிருக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவும், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source link